என் இதய தெய்வத்துக்கு!

அனைவருள்ளும் அந்தராத்மாவாக இருந்து சற்றும் எதிர் பாராத வகையில் இந்த வாய்ப்பை எனக்கு அருளிய பத்ம பாதங்களுக்கு இந்தச் சிறியவளின் இதயங் கனிந்த நன்றிகள்!May The World Be Blessed For Long With The Feet Of Guru Ramana Who Abides As That Silent Principle,Which Absorbes All Of Us & Remains By It Self As The Root Of The Three Principles (SOUL, WORLD, ESWARA)Spiritual Instruction. ஸ்ரீ ரமணார்ப்பணமஸ்து!

Wednesday, 2 October 2013

”மகாத்மாவும் மகா ஆத்மாவும்”

பகவான் ரமணர், மகாத்மா காந்தி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மதிப்பு வைத்திருந்தனர். காந்தி திருவண்ணாமலை வந்திருந்தபோது ரமண மஹர்ஷியை தரிசிக்க எண்ணியிருந்தார். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அது முடியாமல் போனது. மூன்று முறை காந்தி ரமணரை தரிசிக்க முயற்சி செய்தார். ஆனால் அது நிறைவேறவில்லை.
1948ல் மகாத்மா மறைந்தார் என்ற செய்தி நாடு முழுதும் துக்கத்தை ஏற்படுத்தியது. வானொலிகளில் தொடர்ந்து பஜனை, பிரார்த்தனைப் பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. அதைக் கேட்ட பகவான், “ தன் வாழ்நாள் முழுவதும் பிரார்த்தனை செய்தவருக்கு மக்களுடைய பிரார்த்தனை இது” என்றார் தழுதழுத்த குரலில்.
பகவான் காலை நடைக்காக வெளியே செல்லும் போது ஒரு பத்திரிகை நிருபர், காந்திஜியின் மறைவு பற்றி பகவானின் கருத்தைக் கேட்டார். அதற்கு பகவான் மிகவும் உணர்ச்சி மிக்க குரலில், “மகாத்மா காந்தியின் மறைவுக்காக ஒவ்வொரு மனிதனின் இதயமும் துக்கப்படுகிறது. துக்கப்படாமல் யார் இருக்கிறார்கள், யாரால் இருக்க முடியும்?” என்றார்.
அவர் உலா முடித்து திரும்பி வரும்போது, காந்திஜிக்கு மிகவும் பிடித்த “வைஷ்ணவ ஜனதோ” பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதைக் கேட்ட பகவானின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. மாலை 5 மணிக்கு ஆச்ரமத்தில் காந்திஜிக்காக சிறப்பு பிரார்த்தனை, வழிபாடு நடைபெற்றது. பகவானும் அதில் கலந்து கொண்டார்.
மறுநாள் காந்தியின் மரணம் பற்றி பக்தர் ஒருவரிடம் “ ம்ம். சுயராஜ்யம் கிடைத்து விட்டது. நீங்கள் வந்த வேலை முடிந்து விட்டது. ஏன் இன்னும் இருக்கிறீர்கள்? போக வேண்டாமா? ஏற்கனவே தாமதமாகி விட்டது என்பது போல காந்தி அனுப்பப்பட்டு விட்டார்” என்றார் சோகத்துடன்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!


அது ரமணாச்ரமத்தின் ஆரம்ப கால கட்டம்

.ஒருநாள் பின் மாலை நேரம். மாத்ருபூதேஸ்வரர் ஆலயத்தில் அப்போது இருந்த ஒரு சிறு கொட்டகையில் ரமணர் சில அடியார்களுடன் அமர்ந்திருந்தார். அவரது கையில் அவர் எழுதிய ஒரு நூலின் சில பாடல் குறிப்புகள் இருந்தன. நிறுத்தி, நிதானமாக ஒவ்வொரு அடியாகப் பாடி அவர் பக்தர்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார்
ஒரு பாடலைப் பாடிய அவர் விளக்கமாக, “கடவுளை நம் கண்களைக் கொண்டு காண முடியாது. நம் புலன்களைக் கொண்டும் உணர முடியாது. இதுவே ‘கடவுளைப் பார்ப்பதென்பது, கடவுளாகவே ஆகி விடுதல்’ என்று கூறப்படுகிறது” என்றார்.
உடனே அடியவர் ஒருவர் இடையில் குறுக்கிட்டு, “இதை பகவான் தன் சொந்த அனுபவத்தில் கூறுகிறாரோ?” என்று கேட்டார்.
உடனே பகவான். “இல்லையென்றால் சொல்லத் துணிவேனா?” என்றார்.
கேள்வி கேட்டவரும், மற்ற பக்தர்களும் பதில் பேசாமல் மௌனியாகினார்

லட்சுமி என்கிற பசு....

ஆஸ்ரமத்தில் லட்சுமி என்ற பசு இருந்தது. அது 6 மாதக் கன்றுக் குட்டியாக இருக்கும் போது ரமணரிடம் வந்தது. 1924 முதல் 1948 வரை அவருடன் வாழ்ந்தது. ஒரு நாள் அது நோய்வாய்ப்பட்டு படுத்து விட்டது. ரமணர் மாட்டுப் பட்டிக்குச் சென்று லட்சுமிக்கு அருகில் அமர்ந்து தம் மடியில் அதன் தலையை எடுத்து வைத்துக் கொண்டார்.
தம்மை அடைந்த பசுவையும் முக்தியடையச் செய்யும் பெருங்கருணை படைத்த ரமணரின் மடியில் உயிரைவிடும் பாக்கியம் அப் பசுவுக்குக் கிடைத்தது.
“லட்சுமியம்மா ! லட்சுமியம்மா !” என்று சொல்லி தம் திருக் கரத்தால் அதன் தலையைத் தடவிக் கொடுத்தார். லட்சுமியின் உயிர் பிரிந்தவுடன், சடலத்தை நன்னீரால் குளிப்பாட்டி, மஞ்சள்பூசி, நெற்றியிலே குங்குமம் இட்டு, மாலை அணிவித்து, பட்டுத்துணி கட்டி, தூபதீபம் காட்டி, சமாதி செய்தார்கள். கடைசிவரை ரமணர் அருகே இருந்தார். இன்றும்கூட லட்சுமியில் சமாதியில் பகவான் ரமணர் அதன் மீது பாடிய இரங்கற்பாவை நாம் காணலாம்.

ஒரு சமயம் ஆஸ்ரமத்திலே விசேஷ பூஜைகள் நடந்தபோது சாப்பாட்டுக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்தன. கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் ஆஸ்ரம நிர்வாகி கோபம் அடைந்து ஏழைப் பரதேசிகளைப் பார்த்து, “பரதேசிகள் உள்ளே வரவேண்டாம். சற்று நேரம் பொறுத்துப் பின்பு வரலாம்” என்று கடுமையாகச் சொன்னார். மற்றவர்கள் சாப்பிட அமர்ந்தார்கள். அனைவருக்கும் இலை போடப்பட்டது. வழக்கமான இடத்தில் ரமணர் இல்லை. பகவான் எங்கே ? எல்லாரும் தேடினார்கள். பகவானைக் காணவில்லை.
அவர் தொலைவில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஆஸ்ரம நிர்வாகஸ்தர்கள், “பகவான் ஏன் இங்கு வந்து விட்டீர்கள்? சாப்பிட எல்லோரும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று கேட்டார்கள்.
அதற்கு ரமணர், “பரதேசிகள் உள்ளே வர வேண்டாம் என்று சொன்னார்கள். நானும் ஒரு பரதேசி தானே?” என்றார். ஆஸ்ரமவாசிகள் தங்கள் தவறை உணர்ந்து அனைவரையும் ஒரே நேரத்தில் அமர்த்தி சமாராதனை செய்தார்கள்.

ஒரு நாள் பகவான் மூங்கில் கொடியில் உலர்த்தியிருந்த தம் துண்டை எடுக்கும்போது அங்குக் கட்டப்பட்டிருந்த குருவிக்கூடு அசைந்து அதில் இருந்து ஒரு முட்டை கீழே விழுந்து விட்டது. விரிசல் விட்டது.  பகவான் மிகுந்த வருத்தமடைந்தார்.
ஒரு துணியினால் விரிசலடைந்த முட்டையைச் சுற்றி மீண்டும் கூட்டுக்குள் வைத்தார். “ஐயோ, பாவம் ! இதன் தாய் எவ்வளவு வருத்தமடையும் !”
“இதன் தாய்க்கு என் மீது எவ்வளவு கோபம் உண்டாகும்?”
“இந்த விரிசல் கூட வேண்டும்” என்றார்.
மூன்று மணி நேரங்களுக்கு ஒருமுறை முட்டையை எடுத்துத் துணியை நீக்கிப் பார்ப்பார். முட்டையைத் தம் உள்ளங்கையில் வைத்துக் கொள்வார். அதன்மீது தம் கருணைப் பார்வையை செலுத்துவார். பிறகுக் கூட்டில் வைப்பார். இப்படி ஒரு வாரம் கழிந்தது.
குருவி அடைகாத்ததோ இல்லையோ பகவான் அதைவிட அன்புடன் அந்த முட்டையைப் பாதுகாத்தார். தம் திருக்கண் பார்வையினால் கவசமிட்டுக் காப்பாற்றினார். ஏழாவது நாள் விரிசல் மூடிக்கொண்டு விட்டது !
பகவானுக்குப் பரம சந்தோஷம். பரம திருப்தி.
சில நாட்கள் சென்றன. அந்த முட்டையில் இருந்து சின்னஞ்சிறு குஞ்சு வெளி வந்தது. பகவானுக்கு மேலும் சந்தோஷம் ! அந்தக் குஞ்சைத் தம் திருக்கரத்தில் எடுத்துக் கொஞ்சினார். தடவிக் கொடுத்தார்.
தாமே முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தவரைப் போல ஆனந்தமடைந்தார். அந்தக் குருவிக் குஞ்சு செய்த புண்ணியம் தான் எத்தகையது?  பறவைக் குலத்துக்கும் கருணை காட்டிய முனிவரின் அன்பை எண்ணி வியந்தனர் அன்பர்கள்.

Thursday, 19 September 2013

வாழ்வு ஒரு திட்டமிட்ட கணக்கு!!!

* முற்பிறவியில் புண்ணிய வினைகளைச் செய்தவன் வாழ்வில் இன்பத்தை நுகர்ந்து மகிழ்கிறான். பாவவினைகளை செய்தவன் துன்பத்தில் உழல்கிறான்.
* விதிப்படி தான் வாழ்க்கை நடக்கிறது. வாழ்க்கை என்பது திட்டமிட்ட கணக்கு போலத்தான். பாலன்ஸ் ஷீட் என்று சொல்வார்களே அதைப் போன்றது. இதை மாற்றினால் கணக்கு சரிப்பட்டுவராது. ஆண்டவனும் தான் ஏற்படுத்திய நியதியை யாருக்காகவும், எப்போதும் மாற்ற முன் வருவதில்லை.
* விதிப்படி வகுத்திருக்கும் வாழ்க்கையில், நன்மைகளைப் பெற்றால் ஆர்ப்பரிக்காமல் அமைதியோடு இருப்பதற்காகவும், தீமை வந்தால் ஒரேயடியாகத் துவண்டு போய் வருந்தாமலும், இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் காணும் மனநிலையை ஆன்மிகம் நமக்கு கற்றுத் தருகிறது.
* பக்தியால் பக்குவம் பெற்றவர்கள் மனதில் சுகமோ, கவலையோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதோடு வரவிருக்கும் அடுத்தடுத்த பிறவிகளுக்கு வினைச்சுமைகளை சேர்த்துக்கொள்ளாமல் காப்பாற்றுவதற்கும் பக்தி துணையாக அமைகிறது. உண்மையான பக்தி தீமைகளில் இருந்து மனிதனைக் காப்பாற்றுகிறது.
"அகந்தை அகலட்டும்"


* நெருப்பின் சுடரிலிருந்து பொறிகள் கிடைக்கின்றன. ஆனால், அவை வெளியில் சிதறி விழுகின்றன. ஆனால், நாம் ஒரு போதும் கடவுளுக்கு வெளியில் இல்லை.
* சிவனடியில் முழுமையாகச் சரணடைந்துவிட்டால் நிறைந்த அமைதி கிடைப்பதுடன் ஆன்ம உணர்வு கிடைக்கிறது.
* இதயத்தில் இருக்கும் அகந்தை விலகுதலே சரணாகதி
ஆகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால்
ஏமாறுவதில்லை, அவர் காண்பதெல்லாம் அகந்தை, எந்த அளவுக்குப் பாக்கி இருக்கிறது என்பதும், அதனை எந்த அளவில் அழிக்கலாம் என்பதுமேயாகும்.
* தெய்வீகம் அனைத்துக்காலங்களிலும் அனைத்து
சூழல்களிலும் பரவி நிற்கிறது. தனி மனிதர் தன்
விருப்பம் போல் நடக்க முடியாது, தெய்வீகத்தின்
சக்தியை உணர்ந்து நடக்க வேண்டும்.
* கடவுள் அல்லது குருவிடம் ஒருவர் சரணடைந்து
விட்டால், அவர் சரணடைந்த சக்தியே அவரைச் சரியான பாதையில் அழைத்துச் செல்கிறது. கடவுள் அல்லது குருவை நம்பாத போது தான் சந்தேகம் எழுகிறது.
- ரமணர்

Wednesday, 11 September 2013

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!

                                                            
                                                                  பகவான் ரமணர்
1.         மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதானால் எந்தப் பயனும் இல்லை.
2.         சாதனைக்கு தேவை சத்துவ உணவும் நல்ல சத் சங்கமுமே!. மாமிச உணவு கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். மற்றபடி வேறு விதிகள் என்று எதுவும் இல்லை.
3.         கடவுளை ஒவ்வொருவரும் அவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும்.
4.         கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட  கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.
5.         தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.
6.         மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதனையின் நோக்கமாகும்.
7.         குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.
8.         தியானத்தில் ஆன்ம தியானம் எனப்படுவதே சிறந்தது. அது சித்தியானால் மற்ற தியானங்கள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஒவ்வொருவருடைய மனப் பக்குவத்திற்கு ஏற்றவாறு தியான முறைகளைக் கை கொள்ள வேண்டும்.
9.         உணர்வு ஒருமைப்பட்ட தியானத்தின் போது சில வகை ஒலிகள் கேட்கும். காட்சிகள் தெரியும். ஓர் ஒளி ஊடுருவது போல் தோன்றும். ஆனாலும் இவற்றில் மயங்கி தன்னிலை இழந்து விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
10.       மந்திரங்களை இடைவிடாது சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு என எல்லாம் ஒன்றே என்று ஆகும்.
11.       ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம்.  ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுவே மிகவும் முக்கியம்.
12. இறைவனை, ஞானத்தை ஒவ்வொருவரும் முயன்றுதான் அடைய வேண்டும். There is no any Short Routes to Reach the Feet of God. 
 
 

Tuesday, 10 September 2013

சும்மா இருப்பது சிரமம்!!!

* கடவுளும், குருவும் உண்மையில் வேறு வேறு அல்ல, புலி வாயில் பிடிபட்டது எப்படி திரும்பாதோ, அதேபோல் குருவின் அருட்பார்வையில் விழுந்தவர்களும் கைவிடப்படமாட்டார்கள்.
* நீ விரும்புவது அனைத்தையும் பகவான் உனக்குத் தருவார் என்று நம்பினால், உன்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்துவிடு.
* கடவுளை உணர்வதற்கு நாம் செய்ய வேண்டியது சும்மா இருப்பது தான், சும்மா இருப்பதைப் போல சிரமமான செயல் வேறு இல்லை.
* அமைதியே நமது இயல்பான சுபாவம். எனவே அதைத் தேடவேண்டாம். உபத்திரவப்படுத்தும் எண்ணங்களை ஒழித்தாலே போதும்.
* நாமே தான் நமது பிரச்னைகளுக்கு மூலகாரணம், எனவே, நாம் யார் என்பதை நன்கு புரிந்து கொண்ட பிறகு, கடவுள் ஆராய்ச்சியில் இறங்குவது நல்ல பயன் தரும்.
* மனதை மெதுவாக சிறுகச் சிறுக அடக்கி தன் வழிக்குக் கொண்டு வரவேண்டும், இதற்கு கடும் பயிற்சியும் வைராக்கியமும் தேவை.
* அறிவு, நம்மிடத்திலுள்ள அறியாமையைப் போக்குகிறது, அது புதிதாக எதையும் உருவாக்குவதில்லை.
- ரமணர்
"பிராயச்சித்தம் சொல்லட்டுமா "


*சிவனடியில் முழுமையாகச் சரணடைந்து விட்டால் அமைதியும், ஆன்மிக உணர்வும் கிடைக்கும். அந்நிலையில் நம் குறைகளைப் பற்றி முறையிடும் எண்ணம் தோன்றாது. முழுமையான பக்தியின் இயல்பு இது தான்.
* புதிய ஆசைகளை வளர்க்காதீர்கள், புதிய விஷயங்ககளைத் தேடி அலையாதீர்கள், நீங்கள் செய்த தவறுகளிலிருந்து மீளுவதற்கு உரிய பிராயச்சித்தம் இதுவே. ஆனால், மனிதர்களோ இதற்கு நேர்எதிர்மாறாக அலைந்து துன்பத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.
* கடவுளிடமோ, குருவிடமோ சரணடைந்துவிட்டால், அவரது அருளே ஒருவரைச் சரியான பாதையில் அழைத்துச் செல்லும். அதன்பின், ஒருவர் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை.
* இறைவன் காப்பாற்றுவான் என்ற எண்ணத்தில் உறுதி இருந்தால் மனம் தெளிவடையும். அப்போது தவறு செய்ய இடம் உண்டாகாது.
* "கடவுளிடம் சரணடைந்து விட்டேன்' என வெறும் வார்த்தையை மட்டும் உதிர்த்து பயனில்லை. உளப்பூர்வமாக அவரிடம் சரணடைய வேண்டும்.
- ரமணர்

Wednesday, 17 July 2013

இறைவனிடம் நம்மை அர்ப்பணிப்போம்!!!

*ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாட வேண்டும். இது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். உள்மனதில் யார் அமைதியை ஏற்படுத்துகிறார்களோ அவரையே குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
* பிறர் வேறு; நீ வேறல்ல. ஒருவருக்குக் கொடுத்தாலும், அது உனக்கே கொடுத்துக் கொண்டதாகும். நீ ஒருவரைப் பழித்தாலும், ஏமாற்றினாலும் அது உன்னையே ஏமாற்றிக் கொண்டதாகும். அதனால், ஒவ்வொரு உயிரையும் தன்னுயிராக எண்ணி நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
* சரணாகதி என்பதே வலிமை மிக்கப் பிரார்த்தனை.
கடவுள் நம்மைப் பற்றிய எல்லாச் செயல்களுக்கும் பொறுப் பேற்கிறார் என்ற நம்பிக்கை அவசியம். சரணாகதியாக இறைவனை நாடுபவர் முழுமையாகத் தன்னைக் கடவுளிடம் அர்ப்பணித்து விட வேண்டும்.
* சமுதாயம் என்பது உடம்பு போன்றது. தனி மனிதர்கள் அதன் அங்கங்கள். ஒருவன் தன்னைத் தானே திருத்திக் கொண்டால் சமுதாயச் சீர்திருத்தம் தானே நிகழும். எனவே, ஒவ்வொருவரும் சுயசீர்திருத்தம் செய்து கொள்வது அவசியம்.
-ரமணர்